நடிகை சுஷ்மிதா சென் சென்னை எழும்பூர் கோர்ட்டில்
ஆஜராக உத்தரவு
சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 18 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்னுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை சுஷ்மிதா சென் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மும்பை கார் விற்பனை நிறுவனர்களுக்கு எதிராக வருவாய் புலனாய்வு துறை தொடர்ந்த வழக்கில் 5 ஆவது சாட்சியமாக சுஷ்மிதா சென் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜூலை 20 ஆம் தேதி சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தனக்கு எதிரான வாரண்ட்டை எதிர்த்து சுஷ்மிதா சென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கெனவே சொகுசு காருக்கான வரி தொகை 20.31 லட்சம் செலுத்தி விட்டதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சுஷ்மிதா சென் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேரில் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சுஷ்மிதா சென் ஆஜராகும் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அன்றைய தினமே சுஷ்மிதாவிடம் சாட்சி விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- சி.ஜீவா பாரதி