சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அவரது பத்தாண்டு கால நண்பர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் பத்தாண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் பறித்து வந்தார். பல முறை எச்சரித்தும் கேட்காததால், அவரிடம் இருந்து விலகியிருந்தேன். தன்னை பெரிய தொழிலதிபர் போலவும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நெருக்கமானவராகவும் காட்டிக் கொண்டு, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அதுபோலவே, சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து, இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்தது. அனைத்து தகவல்களும் தெரிந்த என்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹேம்நாத்தின் ஜாமின் மனு, நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, பதில்மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.