திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்பவர் உய்யக்கொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான் இலங்கை அகதி என்றும், தனக்கு அப்பா, அம்மா இல்லை என்றும் வேலை கேட்டு வந்துள்ளார். அப்போது, அவருக்கு பணிப்பெண்(Sales Woman)வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
விஜயலட்சுமிக்கு சிவக்குமார், செந்தில்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அவ்வப்போது பர்னிச்சர் கடைக்கு வந்து செல்லும் நிலையில், செந்தில்குமாருக்கு பணி பெண் ஜனனியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜனனிக்கு மாதாமாதம் முறையாக ஊதியம் அளித்து வந்துள்ளனர். மேலும் ஜனனி, தாய் தந்தை இல்லாத பெண் என்பதால், அவ்வப்போது செந்தில்குமார் சிறுசிறு பண உதவிகள் செய்து வந்துள்ளார். நாளடைவில் ஜனனியை தேடி பல ஆண் நபர்கள் கடைக்கு வந்து சென்றதால், ஜனனியை கண்டித்துள்ளனர். ஆனால் ஜனனியோ அதைக் கேட்காமல் தொடர்ந்து அவரது போக்கில் சென்றதால், ஜனனியை விஜயலட்சுமி வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். ஆனால் ஜனனியோ, அதனை ஏற்க மறுத்து, தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் எனவும், தனது கட்சி ஆட்களை வரவழைத்து உங்களை அசிங்கப்படுத்துவேன் என்று கூறியதோடு, உன் மகன் செந்தில்குமார் மீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றியதாக புகார் கொடுத்து குடும்பத்தையே அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி இரவு 08.30 மணியளவில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு ஜனனி மற்றும் சென்னையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் என்று கூறப்படும் சுதாகர் மற்றும் இரண்டு நபர்கள் சென்று விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரை நான்கு பேரும் சேர்ந்து அடித்து உதைத்து, கடுமையாக தாக்கியதோடு, ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் உங்களை விடுவேன், இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் துணையோடு உங்களை காலி பண்ணிடுவேன் என்றும், மேலும் சமூக வளைதளங்களில் செந்தில்குமார் தன்னை காதலித்து ஏமாற்றியதாக பொய்யாக செய்தி வெளியிட்டு, அசிங்கப்படுத்திவிடுவேன் எனவும், உயிரோடு எரித்து விடுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து ஜனனி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் நோக்கம் உடையவர். இதுபோன்று பலரை மிரட்டி பணம் அபகரித்துள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் உடந்தையாக இருந்து மிரட்டி பணம் அபகரித்துள்ளனர். இதற்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள ராமர் என்பவரை காதலிப்பதாக கூறி பணத்தை ஏமாற்றி அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய வைத்து பணத்தை அபகரித்துள்ளார் என்று பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகர், ராஜேஷ்குமார் மற்றும் சேந்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜனனி, விஜயலட்சுமியின் மகன் செந்தில்குமார் தான் விவகாரத்து பெற்று விட்டதாக கூறி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், செந்தில்குமாரின் குடுபத்தினர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும்,செந்தில்குமாருடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுவதாக ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.