நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடனும் 234 தொகுதி பொறுப்பாளர்களுடனும் பனையூரில் இன்று ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேலானோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். முதல் நாளாக இன்று ஓசூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், சென்னை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்தார்.
கடந்த 17 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களைப் பாராட்டி அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பொருட்டே இந்த ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று, நாளை, நாளை மறுநாள் என மொத்தம் 3 நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறதாம். ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் அப்பகுதியின் தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 234 தொகுதி பொறுப்பாளர்களைச் சந்திக்கச் சென்றபொழுது நடிகர் விஜய்யின் கார் சிக்னலை மதிக்காமல் சென்றதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.