Skip to main content

நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம்.. உங்களை காப்பாற்றுவது எங்கள் கடமை.. நெல் ஜெயராமன் மருத்துவச் செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன்!

Published on 12/11/2018 | Edited on 14/11/2018

    
நஞ்சை விதைக்கும் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட வீரியமில்லா விதைகளால் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து இன்று தமிழகம் முழுவதும் நஞ்சில்லா உணவுக்காக பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வரும் நெல் ஜெயராமனுக்கு கொடிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனிதனுக்கு எந்த நோய் வரக் கூடாது என்று 169 ரக பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தாரோ அவருக்கே அந்த நோய்.. பாரம்பரிய நெல் ஜெயராமனை அந்த கொடிய நோயிலிருந்து மீட்போம் என்று உணர்வுள்ள அத்தனை உள்ளங்களும் கலங்கினாலும் கைகொடுத்து துணைக்கும் நிற்கிறார்கள்.
    

கிட்னியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் கடந்த மாதம் 19 ந் தேதி சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். 


    
நஞ்சில்லா உணவுக்காக போராடி விதைகளை சேமித்த விவசாயி நெல் ஜெயராமனுக்கு சிகிச்சை என்றதும் நேரில் கூட சென்று பார்க்காமல் தனது உதவியாளர் மூலம் அப்பல்லோ நிர்வாகத்திடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் மருத்துவ செலவுகள் அத்தனையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என்று சொன்னதுடன் முதலில் வைப்புத் தொகைக்கு காசோலையும் வழங்கியதுடன் அடிக்கடி மருத்துவர்களிடம் நலம் விசாரிப்புகளையும் செய்து வருகிறார்.

 

nel jayaraman


    
இந்த நிலையில் தான் தனக்கு மருத்துவ உதவி செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க வேண்டும் என்ற நெல் ஜெயராமனின் கோரிக்கையை ஏற்று 11 ந் தேதி கத்துக்குட்டி இயக்குநர் இரா.சரவணனுடன் அப்பல்லோ வந்து பார்த்தார். அப்போது மருத்துவ உதவிக்கு நன்றிகள் என்று நெல் ஜெயராமன் சொல்ல..
    


”அய்யா நீங்க இந்த நாட்டின் பொக்கிஷம்” உங்களை காக்க வேண்டியது எங்கள் கடமை. அந்த கடமையை தான் செய்திருக்கிறேன். அதுக்காக நன்றி சொல்லாதீங்க. உங்களைப் போன்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உங்க மருத்துவச் செலவு மட்டுமில்லை உங்க மகன் சீனிவாசராமின் முழு படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்க கவலையில்லாம சிகிச்சை எடுத்துகிட்டு நானும் அய்யா சத்தியராஜ்ம் இணைந்து நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள முழுக்க முழுக்க விவசாயிகளை வைத்து எடுக்கப்பட்டுள்ள கனா திரைப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வரனும். அதுக்குள்ள பூரண குணமடைஞ்சுடுவீங்க என்று நெகிழ்ச்சியாக சொல்ல.. 


    
அவர் கைகளை பற்றிக் கொண்ட நெல் ஜெயராமன் நிச்சயம் படம் பார்க்க வருவேன். அதே போல இயற்கை விவசாயம் பற்றிய கதையுள்ள படங்களில் நடிக்கனும் என்று சொல்ல செய்வேன் என்றார் சிவகார்த்திகேயன்.

 

nel jayaraman


    
இந்த நிலையில் தான்.. பாரம்பரிய நெல் மீட்ட நெல் ஜெயராமனை நடிகர்கள் சத்தியராஜ், சூரி, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.க. வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், அ.ம.மு.க கலைராஜன்,  டி.ஜி.பி. ராசேந்திரன் மற்றும் பலரும் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றுள்ளனர்.


    
டி.ஜி.பி. ராசேந்திரன்.. நெல் ஜெயராமனிடம்.. உங்களுக்கு சீக்கிரமே குணமாகும். ஓய்வுக்கு பிறகு நானும் விவசாயம் தான் செய்வேன். அதில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் பாரம்பரிய விவசாயம் செய்வேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்றார் நெல் ஜெயராமன்.

 

nel jayaraman


    
நெல் ஜெயராமன் உடல் நலம் பற்றி முகம் தெரியாத விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்கள் உள்பட பலரும் வந்து பார்த்தும், தூரத்தில் இருந்தும் விசாரித்துச் சென்றாலும் ஏனோ தமிழக அரசு அவரைப் பற்றி நினைத்த்தாக தெரியவில்லை. ஒரு பொக்கிஷத்தை காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு தானே என்கிறார்கள் விவசாயிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்