நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோன்று, என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாஜகவில் சேரவோ, கட்சியில் சேர்ந்து தலைவர் ஆக வேண்டும் என்றோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் திடீரென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமில்லாமல் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்தது. இதனால் குழந்தைகளை காப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் விரும்பினார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார். இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து குழந்தைகளை காப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசும் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த அமைப்பின் தலைவராக லதா ரஜினிகாந்த் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இரு தரப்பில் இருந்தும் இன்னும் வெளியாகவில்லை.