விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரத பண்பாட்டு கழகம் சார்பில், பாரதமாதா குடமுழுக்கு விழா மற்றும் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன், பஞ்சமி நில விவகாரத்தில் திமுக எதிர்ப்பு நிலையைக் கையாண்டவர். பட்டியலின சமுதாய நலனில் அக்கறை கொண்டவர். 2021 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்து வெற்றி பெறுவோம். குடியுரிமைச் சட்ட ஆதரவு நிலைப்பாட்டால் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியிருக்கிறது.
முருகன், தகுதி வாய்ந்தவர்; திறமை வாய்ந்தவர்; பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட இல்லாத சமூக நீதியை, அதனைக் காக்கும் வேலையை பாஜக செய்துள்ளது. இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால், உயர் ஜாதியினர் மட்டும்தான் பாஜகவில் வளர முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பொய்யாகிவிட்டது.
காஞ்சி சங்கர மடத்தில் தாழ்த்தப்பட்டவர் தலைவராக முடியுமா என்று கேட்கும் திமுகவில் தற்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக வர முடியுமா? பாஜக-வை பொறுத்தவரையிலும், சமூக நீதி மட்டுமல்ல, சுமூக நீதியும் வேண்டுமென செயல்படுகிறோம். தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். அவருடைய கருத்து பா.ஜ.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல. பா.ஜ.க.விலும் கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை என்றே உள்ளது.
ரஜினிகாந்த் யாருக்காக இதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் தேச பக்தி கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அவர் என்ன கொள்கை வைத்திருக்கிறார் என்பது தெரிந்தபிறகே அவரைப் பற்றி கூற முடியும்.
ரஜினிகாந்த் தமிழர் இல்லை அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றெல்லாம் பேசுவது சரியல்ல. எம்.ஜி.அரும் ஜெயலலிதாவும் தமிழர்கள் இல்லை. ஆனால், அவர்களை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார்கள் மக்கள். யாரை மக்கள் ஏற்கிறார்களோ, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
திமுகவும் சீமான் போன்றவர்களும் ஒருவரின் பிறப்பை எதிர்க்கிறார்கள். பிறப்பை வைத்து, தமிழர்களின் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் மகாராஷ்டிராவில் எம்எல்ஏ ஆகி உள்ளனர். சிங்கப்பூரில் எம்.பி.க்கள் ஆகி உள்ளனர். கூகுள் சிஇஓ ஒரு தமிழர். உலகம் முழுவதும் தமிழர்கள் கோலோச்சுகின்றனர். இப்படியிருக்கும்போது, திமுகவினரும், சீமான் போன்றவர்களும் இப்படி பேசுவது தவறு.
இஸ்லாமியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என ஸ்டாலின் சொல்லியிருப்பது தவறான வழிகாட்டுதல் ஆகும். இதுதான் மதவாதம். கணக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் பாஸ்போர்ட் பெற இயலாது. இஸ்லாமியர்கள் வெளிநாடு செல்வதை எதிர்க்கிறாரா ஸ்டாலின்? ரேசன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது. ஸ்டாலின் சதி செய்கிறார். முதலில் திமுகவினர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கூறட்டும். ஸ்டாலின் இப்படி பேசியது கண்டிக்கத்தக்கது.” என்றார்.