தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், இன்றும் (09.11.2021) 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்தே தமிழ்நாடு முதல்வர் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து பாதுகாப்புப் பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உணவு மற்றும் நிவாரண உதவிகள் செய்துவருகிறார்.
மூன்றாம் நாளாக இன்றும் பல இடங்களில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணப் பொருட்களை முதல்வர் வழங்கினார். இன்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம், தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குப் பின்னரே மழைநீர் தேங்கும் சூழல் உள்ளது என மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ''தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர். முறையாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெற்றும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.