சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், சிதம்பரம் நடராஜ கோவிலில் நடைபெறும் தேர் மற்றும் தரிசன விழாவில் பத்திரிகையாளர்கள் தெற்கு வீதியில் உள்ள சாரதராம் கட்டிடத்தின் மாடியில் இருந்து தேரோட்டத்தை புகைப்படம் வீடியோ எடுக்கவும், தரிசன விழாவின் போது கிழக்கு கோபுர வாயில் அருகில் உள்ள கிணற்றுப் பகுதியில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர் மற்றும் தரிசனம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் தூரத்திலிருந்து சாமியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 20-ந்தேதி நடைபெற்ற தரிசனவிழாவில் பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கப்பட்ட கிணற்றடி பகுதியில் பத்திரிகையாளர்கள் படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்த போது தீட்சிதர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் உங்களை கோவிலைவிட்டு வெளியேற சொல்லியுள்ளார். புகைப்படம் வீடியோ எடுக்ககூடாது வெளியே செல்லுங்கள் என பக்தர்கள் மத்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் தகராறு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தீட்சிதர் ஒருவர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருக்கும் தரிசன விழாவில் ஒலி பெருக்கி மூலம் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் கூறிக்கொண்டே இருந்தார். இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஒலி பெருக்கிமூலம் செய்தியாளர்கள் குறித்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்த புகார் தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை அமைச்சர், தமிழக காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது.