கனிமவளக் கொள்ளையை எதிர்த்து தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். பொதுக்கூட்டத்தின் பொழுது திமுகவினர் சிலர் ரகளையில் ஈடுபட்ட நிலையில் பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திமுகவை விமர்சித்ததால் மேடைக்கு வந்த திமுக பிரமுகர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதோடு நாற்காலியை தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது வீசியதோடு மேடையையும் கலைக்க முற்பட்டார். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்த அறிக்கையில், ''ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜக முறையில் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகிறார்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ''கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.