நீதிபதிகள், அரசியலமைப்பு பிரதிநிதிகள் பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறான கருத்துக்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு பிரதிநிதிகள் மீது அடிப்படை ஆதாரமில்லாமல் அவதூறான கருத்துக்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மலிவான வழியில் விளம்பரம் தேட முயற்சிக்கும் இதுபோன்ற நபர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இணையதள குற்றங்களைக் கண்காணிக்க சிறப்பு பிரிவு ஒன்றை தமிழக டிஜிபி உருவாக்கி நடவடிக்கை எடுக்கவேண்டும். சமூக அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தைப் பராமரிக்கவும் நீதித்துறை தனது அங்கீகாரத்தை பயன்படுத்தும் நேரம் இது” என தெரிவித்துள்ளார்.