தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டுவரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவின் இ.சி.ஆர்.பி வார்டுகளைப் பார்வையிட்டார். இந்த வார்டில் ஒவ்வொரு படுக்கையும் தலா 2.90 இலட்சம் மதிப்பில் மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளன. இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, தொடர் கண்காணிப்பு பணியும் நடைபெற்றுவருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகியவற்றை விட தமிழகத்தில் நோய் தொற்று 22 என்ற அளவில் மிகக்குறைவாக பதிவாகி வந்தது. தற்போது 50 வரை உயரத் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனாலும் இறப்பு மிகமிக குறைவாக உள்ளது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு வராத மருத்துவர்களைக் கண்காணிக்க மாவட்டம் தோறும் அறிவுறுத்தி உள்ளோம். சில குறைபாடுகள் எங்கள் கவனத்திற்கு வருகிறது. தவறு செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்களுக்குப் பின்பு பள்ளிகள் தற்போதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரும்போது அவர்களின் மனநிலை சீராக மாறிவிடும். 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி இல்லை. தமிழக அரசின் கொள்கையின் அடிப்படையில், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரி அனுமதி கிடைத்துவிட்டால், இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லுாரி உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிடும்” என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.