Skip to main content

பயங்கர விபத்து! கல்லூரி மாணவி பலி! 

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

accident near cudaalore two women passes away

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஓலையூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பொன்னேரி - சித்தலூர் பைபாஸ் இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது விருத்தாசலம் டிரைவர் குடியிருப்பைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரும், அவருடன் லிப்ட் கேட்டு சென்ற ஒரு இளம் பெண் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி சிந்தாமணி(65) மற்றும் சுமதி ஆகியோர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்ப வீட்டிற்கு செல்வதற்காக  சாலையை கடந்தனர். 

 

அப்போது ஹரியின் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லிவிட்டு சிந்தாமணி ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். ஹரி தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சாலையை கடந்து கொண்டிருந்த ஆடுகள் மீதும், சிந்தாமணி, சுமதி மீதும் மோதியது. இதில் சிந்தாமணி பேருந்தின் சக்கரங்கள் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேலும் ஹரி உடன் லிப்ட் கேட்டு வந்த அந்த இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹரி, சுமதி காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் சாலையை கடந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. ஒரு ஆடு காயமடைந்தது. 

 

இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், பேருந்து வழக்கமாக வரும் பாதையில் வராமல் தற்போது கடைவீதி பகுதியில் சாலை பணி நடைபெறுவதால் சாலை மார்க்கத்தை திருப்பி விட்டுள்ளனர். அதனால் இந்த விபத்து நேரிட்டது. எனவே மீண்டும் பழைய சாலையில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடத்தில் சமாதானம் பேசினர். தொடர்ந்து 2 பெண்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத அந்த இளம் பெண் யார் என விசாரணை நடத்தியபோது, விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் மகள் கவிதா(20) என்பதும், இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விபத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆடுகள் இறந்த இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்