
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத் துறையினர் சார்பில் பேரிடர் கால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பேரிடர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஒத்திகைசெய்து காட்டப்பட்டது.
இந்நிகழ்வில், வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொது மக்களை எப்படிக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக வெள்ள அபாய காலங்களில், அத்தியாவசியத் தேவைகளான உணவு உடை மற்றும் மருந்து உள்ளிட்டவற்றை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். எப்படிப் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். மக்கள், தங்களின் செல்லப்பிராணிகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும், எவ்வாறு அவற்றுக்குத் தேவையான உணவுகளைச் சேமிக்க வேண்டும் என்பன பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதன் பிறகு, தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஒருவரைக் காப்பாற்ற வேண்டும். எப்படித் தீயை அணைக்க வேண்டும் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்திக் காண்பிக்கப்பட்டன. இதில், ஒருவர் மீது தீப்பற்றிக் கொண்டால் எப்படி நாம் அணைக்க வேண்டுமென்று ஒத்திகை நடத்திக் காண்பிக்க, வீரர் ஒருவர் மீது தீயைப் பற்ற வைத்து அதை அணைக்கும் காட்சியை நடித்துக் காண்பித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீரர் மீது அளவுக்கு அதிகமாக தீ பரவ ஆரம்பித்தது. அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தீயணைப்புத் துறை வீரர்கள் அச்சூழ்நிலையை லாவகமாகக் கையாண்டு தீயை அணைத்தனர்.