Skip to main content

கீரமங்கலம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் திட்டை கண்டெடுப்பு

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
கீரமங்கலம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் திட்டை கண்டெடுப்பு



கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தாய் வழிபாட்டு தளமான புதிர் திட்டை கண்டறியப்பட்டுள்ளது.

வில்வன்னி ஆற்று நாகரீக சமூகம் :

    
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாலகிருஷ்ணபுரம், மாத்தூர் ராமசாமிபுரம், மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடையே ஓடும் வில்வன்னி காட்டாற்று படுகையில் அம்பலத்திடல் என்னும் இடத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகமாக மக்கள் வாழ்ந்த அடையாளங்களும், முதுமக்கள் தாழிகளும் சுமார் 125 ஏக்கர் பரபரப்பளவில் விரவிக் கிடக்கிறது. ஆங்காங்கே முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளது. அந்த தாழிகளுக்குள் மனித எழும்புகள், சின்ன சின்ன மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த மண்பாண்டங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ள நிலையில் பானைகளின் கழுத்து பகுதியில் எழுத்துக்களுக்கு முந்தைய காலத்தில் உள்ள குறியீடுகள் காணப்படுகிறது. அந்த குறியீடுகளை பார்த்த தொல்லியல் ஆய்வாளர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வில்வன்னி ஆற்றங்கரையில் பெருஞ்சமூகம் வாழ்ந்துள்ளது. அதற்கு சான்றாக ஆங்காங்கே பானை ஓடுகள், வீடுகள் இருந்த அடையாளமாக மண் திட்டுகள், கற்காரைகள் உள்ளது என்றனர்.

புதிர் திட்டை :
   
இந்த நிலையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மணிகண்டன், ராசேந்திரன், ஆசிரியர்கள் கஸ்தூரிரங்கன், சந்திரசேகர் ஆகியோர் பாலகிருஸ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மதியழகன், மகாராஜா ஆகியோர் துணையுடன் மீண்டும் அம்பலத்திடலில்  ஆய்வை மேற்கொண்டனர் அப்போதும் தாழிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் அருகே மனித எழும்புகள் மற்றும் பல்வேறு பழங்கால பானை ஓடுகள் எடுக்கப்பட்ட நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் தாய் தெய்வ வழிபாட்டுக்காண புதிர் திட்டை இருப்பதை கண்டறிந்தனர்.
   
இது குறித்து ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன் கூறும் போது.. அம்பலத்திடல் பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்காண ஏராளமான வரலாற்று சான்றுகள் புதையுண்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள தாய் தெய்வ வழிபாட்டு தலமான புதிர் திட்டை அம்பலத்திடலிலும் கண்டறிப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. இங்கு கிடைத்த பானை குறியீடுகளை வைத்து சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் புதிர் திட்டை என்பது அதற்கும் முந்தைய காலம் என்று கூறலாம்.
   
அதனால் அம்பலத்திடல் பகுதியில் மத்திய, மாநில தொல்லியல் துறை இந்தப் பகுதியை ஆய்வு மேற்கொண்டு இங்கு புதைந்துள்ள வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும். இன்னும் காலம் கடத்தினால் தடயமே இல்லாமல் அழிந்து போக வாய்ப்புகள் உள்ளது. கீழடிக்கு இணையான சான்றுகள் இங்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.
   
மேலும் அந்தப் பகுதியில் ஆடு மேய்ந்தவர்கள் கூறும் போது.. இது போன்ற மண்பானைகள் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து இந்தப் பகுதியில் ஆடு மேய்ப்பவர்களே உடைத்துவிட்டார்கள். எஞ்சியதை அரசாங்கம் மீட்க வேண்டும். அரசு தலையிடாவில்லை என்றால் இந்தப் பகுதி ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டுவிடும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்