இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் நாளை (01.06.2024) நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்தது. ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே வட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாப்புப் படையினர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பி.லால் கூறும்போது, “மருத்துவமனைக்கு மொத்தம் 23 பாதுகாப்புபடை வீரர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு உயர்நிலையிலான காய்ச்சல் இருந்தது.
மேலும் படை வீரர்களின் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தது, அவர்கள் இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அவர்கள் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், பணியில் இருந்த இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்று கூறபடுகிறது. அதே சமயம் பீகார் மாநிலத்திலும் வெயில் தாக்கம் காரணமாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் அதிக வெப்பத்தால் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.