மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிப்புகள் பெரும்பாலும் சாதாரண, நடுத்தர மக்களுக்கு எதிராகவே இருக்கிறது என எதிர்கட்சிகள் மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சியும் விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் பா.ஜ.கவும், த.மா.கா.வும் உள்ளது. ஒரே அணியாக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் கண்டன குரல் கொடுப்போம் என்கின்றனர் தமிழ் மாநில காங்கிரஸார். த.மா.கா.வின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா இன்று கூறுகையில்,
"இந்தியாவில் வரலாறு காணாத வகையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து தங்களின் வருமானத்தையும் பறிகொடுத்து, வாழ்வாதாரத்திற்காக அவர்கள் கடும் போராட்டத்தை சந்தித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதுப்படி, தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் 7.9 சதவீத வட்டி 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை கொடுக்கும் செயலாகும்.
அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை, 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெறுகிற வருமானம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல பொது வருங்கால வைப்புநிதி என்பது பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களின் மொத்த தொகுப்பாகும். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டியும், பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள்.
தங்களது மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்குச் செலுத்துகிறார்கள். தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்ததை உடனே கைவிடவேண்டும் என்று த.மா.கா. இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.