தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் பாலாகவும், பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைக்கு வருகிறது. அதனால் ஆவினுக்கு அதிக அளவு பால் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டும் உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று, பால் வளத்துறை அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் பால்வளத்துறை சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 70% செய்து வந்த உள்ளூர் விற்பனையை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள், டீ கடைக்காரர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதுநிலை ஆய்வாளர் திருப்பதி மற்றும் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் பால் விற்பனை செய்ய முடிவான பிறகு உள்ளூர் விற்பனையைத் தொடங்கியதுடன் ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய அமைச்சர் நாசர், “கூட்டுறவு சங்க முறைகேடுகளை தடுக்கவும், பிற ஊர்களுக்குத் தேவையான பால் அனுப்பவுமே 10% உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப சொல்கிறோம்” என்றார்.
இதையடுத்து திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்ட பால்வள துணை இயக்குநர் ஜெயபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பால்வளத்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி உள்ளூர் விற்பனை 10% மட்டுமே பால் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 44% சதவீதம் உள்ளூர் விற்பனை செய்யப்படுவதால் ஆவினுக்கான பால் குறைகிறது. ஆகவே, கீரமங்கலம் பகுதியில் டீ கடைகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் பால் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் கணேசன் மற்றும் பணியாளர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். டீ கடைகளுக்கு பசும்பால் விற்பனை நிறுத்தியுள்ளதால் செவ்வாய்க்கிழமை கீரமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டீ கடைகளை மூட முடிவெடுத்துள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கத்தில் பசும்பால் கேட்டு நிற்கவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.