ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்ய, 303 டேங்கர் லாரிகளை வாடகைக்கு பெறுவது தொடர்பான டெண்டர் மீது எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று விளக்கமளிக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்துக்கு பால் கொண்டு செல்வதற்காக, 303 டேங்கர் லாரிகளை வாடகைக்கு பெறுவது தொடர்பாக 2019 ஆகஸ்டில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு டெண்டர் கோரியது.
அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், டெண்டர் இறுதி செய்யப்படாமல் உள்ளதால், டெண்டர் முடிவுகளை வெளியிட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு உத்தரவிடக் கோரி நாமக்கல்லைச் சேர்ந்த நவீதா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பால் டேங்கர் லாரி டெண்டர் தொடர்பான உத்தரவுகள் எந்த தேதியில் வெளியிடப்படும் என்பது குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் வள்ளலார் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தனித்தனியாக விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.