நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது முழுவதுமாக வெளியாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக மாநகராட்சி அனைத்திலும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதே போன்று நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனியாகவே 153 இடங்களில் வெற்றிபெற்றது. அதிமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, பாஜக, அமமுக, சுயேச்சைகள் என பல கட்சிகள் வெற்றிபெற்று சென்னை ரிப்பன் மாமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 5 சுயேச்சைகள் வெற்றிபெற்று பெரிய கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். இதில் ஒருசிலர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், 174வது வார்டில் போட்டியிட்ட 94 வயது மூதாட்டி காமாட்சி அம்மாள் 460 வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். குறிப்பாக பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட இவர் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.