தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 384 ஆக உள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் வேறு மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இன்று 477 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ கடந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக தமிழகத்தில் காரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500 க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 332 பேருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 6278 ஆக உள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது
இன்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து 939 பேர் குணம் அடைந்ததால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,538 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மருத்துவமனையில் 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 61 கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் 31 நாட்களாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை, அதேபோல் திருப்பூரில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும் யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. சேலம், நாமக்கல்லில் 10 நாட்களாகவும், நீலகிரியில் 7 நாட்களாகவும் யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை என்றார்.