தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைய துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசானது புதிய தளா்களுடன் ஊரடங்கை செயல்படுத்தியுள்ளது. அதில் இன்றுமுதல் (28.06.2021) துணிக்கடைகள், நகைக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டதோடு, மாவட்டங்களுக்கு இடையிலான மற்றும் மாநகருக்குள் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊரடங்கிற்கு முன்பு திருச்சி மாநகரில் இயக்கப்பட்டுவந்த 936 பேருந்துகளில் இன்றுமுதல் 80 சதவீத பேருந்துகள் இயங்க துவங்கியுள்ளன. அதன்படி இன்றுமுதல் 735 பேருந்துகள் இயங்குகின்றன. இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும், திருச்சியில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்படாத கரூர், சேலம், நாமக்கல், தஞ்சை, உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்மாவட்டத்தின் எல்லைவரை சென்றுவிட்டு திரும்பும்படி வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 6 மணிமுதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் சேவை துவங்கியுள்ளது. பொதுமக்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். முறையாக அரசு அறிவித்த முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பொதுமக்கள் கையாண்டு பேருந்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து புறப்படும் பேருந்துகள் செல்லும் எல்லை குறித்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
திருச்சி – கரூர் வழித்தடத்தில் பெட்டவாய்த்தலை வரை செல்லும்.
திருச்சி – சேலம் வழித்தடத்தில் தொட்டியம் மேக்கல்நாயக்கன்பட்டி வரை.
திருச்சி – தஞ்சை வழித்தடத்தில் வாழவந்தான்கோட்டை வரை.
குறிப்பிடப்பட்ட மாவட்டங்களுக்கு மட்டும் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு முழுமையாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.