
சேலத்தில், பட்டுச் சேலைகளை 7.61 லட்சம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவந்த ஜவுளிக்கடை அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகையைச் சேர்ந்தவர் குமார் (38). பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்வதுடன், மொத்த வியாபாரமும் செய்துவருகிறார். இவர், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ஸ்ரீ அபிநவ்விடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர், ''சேலம் அழகாபுரத்தில் ஜவுளிக்கடை நடத்திவரும் மதுரை நேதாஜி மெயின்ரோடு நேரு நகரைச் சேர்ந்த சங்கர் (50) என்பவர் என்னிடம் கடந்த 2019ஆம் ஆண்டு 7.61 லட்சம் ரூபாய்க்குப் பட்டுச் சேலைகளைக் கொள்முதல் செய்தார்.
அதற்காக அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவருடைய கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. மீண்டும் அவரிடம் பணத்தைக் கேட்டபோது, அவர் பணம் தராமல் ஏமாற்றியதோடு கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்'' என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன், எஸ்.ஐ. செல்வம் ஆகியோர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர்.
புகாரின்பேரில் ஜவுளி அதிபர் சங்கரை பிடித்து வந்து விசாரித்தனர். அவர், புகார்தாரரிடம் பட்டுச் சேலைகளை வாங்கியதும், அவற்றை வேறு நபர்களுக்கு மொத்தமாக விற்றுவிட்டு அதற்குரிய பணத்தை குமாரிடம் கொடுக்காமல் ஏமாற்றிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டுச்சேலைகளை வாங்கிவிட்டு மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. அவரால் ஏமாற்றப்பட்ட மேலும் சிலரிடம் இருந்தும் புகார்கள் வந்துகொண்டிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சங்கர், சேலம் மாவட்ட 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை, காவல்துறையினர் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.