தர்மபுரி அருகே, பரிசுத்தொகை விழுந்துள்ளதாகக் கூறி, விவசாயியிடம் நூதன முறையில் மர்ம கும்பல் 7 லட்சம் ரூபாய் சுருட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் பாபு (வயது 32). இவர் விவசாயி. இவருக்கு 12.80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதை நம்பிய பாபு, அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய மர்ம நபர், பரிசுத்தொகையைப் பெற முதலில் 6.99 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அதன்பிறகு பரிசுத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
வெறும் 7 லட்சம் ரூபாய் செலுத்தினாலே கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்கிறதே என்ற ஆசையில் அவரும் மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தினார். ஆனால், பல நாள்கள் ஆகியும் பாபுவின் வங்கிக் கணக்கில் பரிசுத்தொகை வரவு வைக்கப்படவில்லை. குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாபு, இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.