திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை போலீஸ் நெருங்கி விட்டதாகவும், இன்னும் 3 மூன்று நாட்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விடுவோம் என்று ஐ.ஜி கண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 4 ஏடிஎம்களில் கொள்ளை நடந்த பகுதிகளின் காவல் அதிகாரிகள் உட்பட 6 காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாகத் திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர், போளூர் உதவி ஆய்வாளர், கலசபாக்கம் சிறப்பி காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரை இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.