சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரம் தொடர்பாக அரசு தலையிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும். அனுமதி பெறாமல் ஒரே நாளில் 58 பேரை நீக்கியது கண்டனத்திற்குரியது. பணியாளர்களின் பணிநிலையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்படக்கூடாது என தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதை மீறி அரசிடம் முன் அனுமதி பெறாமல், சட்டப்படி நோட்டீஸ் அளிக்காமல் திடீரென ஒரே நாளில் 58 சுங்கச்சாவடி ஊழியர்களை நீக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.