தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்களை தமிழக அரசு நியமனம் செய்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 570 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட சாதாரண படுக்கைகள் என சுமார் 1000 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதால் அதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் கண்காணிப்பு மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப்டெக்னீசியன், டேட்டா என்டரி ஆபரேட்டர்கள் தேவை உள்ளதாகவும் இவற்றை உடனே சரி செய்யவும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதே கோரிக்கைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் வைத்திருந்தார். அமைச்சர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ள நிலையில் கடந்த 19 ந் தேதி 50 மருத்துவர்கள், 100 செவிலியர்களை நியமனத்திற்கான நேர்காணல் நடந்தது.
இந்நிலையில் திங்கள் கிழமை மாலை 50 மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கான தற்காலிக பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி டீன் பூவதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை டாக்டர் முத்துராஜா, கந்தர்வகோட்டை சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். 100 செவிலியர்கள் தேவை உள்ள இடத்தில் 10 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மீதி 90 தற்காலிக செவிலியர்களையும் உடனே நியமனம் செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.