சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்கா ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிராங்கிளின். ஆண்டோ. இவர்களின் நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன், சென்னை சூளையைச் சேர்ந்த கலைவேந்தன், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மனோகர் ஆகியோர் உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
வேளாங்கண்ணி மாதா கோவியில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வேன் மூலம் இந்த ஐந்து பேருடன் சேர்த்து மொத்தம் 18 பேர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி சுற்றுலா வந்தனர். தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலை தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலயத்துக்குப் புறப்பட்டனர். அதற்கு முன்பு பேராலயம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மகிமைபுரத்தில் சமையல் செய்த நிலையில், பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, ஆழம் இருப்பது தெரியாததால் இருவர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மூன்று பேரும் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில், அந்த மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இவர்களுடன் வந்தவர்கள் மீன் குழம்பைத் தயார் செய்து விட்டுக் காத்திருந்துள்ளனர். குளிக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாக வராததால் உடன் வந்தவர்கள் தேடிச்சென்றுள்ளனர்.
இதில், கலைவேந்தன், கிஷோர் இருவரும் இறந்த நிலையில் ஆற்றில் உள்ள மண் திட்டில் கிடந்துள்ளனர். இதை பார்த்து உடன் வந்தவர்கள் அதிர்ச்சியில் கதறினர். அழுகுரல்கள் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் திரண்டு விட்டனர். அத்துடன் இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய பிரங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த மீனவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு மனோகர் உடல் மீட்கப்பட்டது. ஆனால், சகோதரர்கள் பிராங்கிளின், ஆண்டோ ஆகியோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடைய, தகவலறிந்து வந்த ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உயிரிழந்தவர்களின் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உள்ளூர்க்காரர்களின் எச்சரிக்கையையும் மீறி, 5 இளைஞர்களும் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளதால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும், ஆற்றில் மேடு, பள்ளங்களைச் சீரமைக்கவும் வல்லுநர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.." என்று கூறினார்.
அவரை தொடர்ந்தும் நடந்த சம்பவம் குறித்துப் பேசிய கொள்ளிடம் பகுதி மக்கள், ''கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதால் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் இருக்கிறது. ஆனால், இந்த ஆபத்து வெளியூரிலிருந்து வருபவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால், இது போன்ற அசம்பாவிதம் நடந்து விடுகிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்ய வேண்டும்.." என்று கொள்ளிடம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.