தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் விதிமுறைகள் அமல் படத்தப்பட்டுவிட்டன. இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக்கூடாது, மூன்று பேருக்கு மேல் இணைந்து பிரச்சாரம் செய்யக்கூடாது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தனிநபர்கள் பணம் எடுத்துச்செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளும், விதிகளும் தேர்தல் நடக்கும் பகுதிக்கு மட்டுமா அல்லது மாநிலம் முழுமைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுக்குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, ‘தேர்தல் நடைபெறும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். ஊராட்சி பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் கிடையாது’ என்றார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ‘தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ தூரத்துக்கு மட்டுமே விதிமுறைகள் இருக்கும், மற்றப்பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது’ என விளக்கினார்.
கிராமப்புறங்களில் அரசின் நலத்திட்டங்கள் வழங்குவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, விழாக்கள் நடத்துவது போன்ற மற்ற பணிகள் தேர்தல் விதிமுறைகளுக்குள் வராது என்கிறார்கள் அதிகாரிகள்.