கடந்த 2019ஆம் ஆண்டு, தீபாவளி நேரத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் சுஜீத் என்ற 2 வயது சிறுவன் விளையாடும்போது, அருகில் தோட்டத்தில் உள்ள பழைய ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து சில நாட்கள் வரை தமிழ்நாடு, மத்திய, தன்னார்வ மீட்புக்குழுவினர் இரவு பகலாகப் போராடியும் கூட சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை.
நள்ளிரவில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறி அந்த இடத்தில் அடக்கமும் செய்யப்பட்டான். அப்போது இதுபோன்ற ஆழ்குழாய் கிணறுகளில் விழுந்தால் பாதுகாப்பாக மீட்க கருவி செய்தால் பரிசு வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்தது. சுஜித் மரணத்தால் இந்தியா முழுவதும் பேரதிர்வு ஏற்பட்டு, பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணறுகளைப் பாதுகாப்பான முறையில் மூடி நிலத்தடி நீர் சேமிப்புக்காக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. சில நாட்கள்வரை அந்தப் பரபரப்பு இருந்தது. திறந்து கிடந்த ஆழ்குழாய் கிணறுகள் அவசர அவசரமாக சாக்கு பைகளால் மூடி, அதன் மேல் கல் தூக்கி வைத்து கணக்கு காட்டினார்கள். அத்தோடு அதனை அதிகாரிகளும் பொதுமக்களும் மறந்துவிட்டனர். இப்போது பழையபடி பாதுகாப்பற்ற ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகள் ஏராளம் திறந்து கிடப்பது வேதனையாக உள்ளது.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சிக்கு குடிதண்ணீர் கொடுப்பதற்காக திருவரங்குளம் - வம்பன் இடையே சுமார் 10க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் பல ஆழ்குழாய் கிணறுகள் சுமார் 300 அடி ஆழத்திற்குள் அமைக்கப்பட்டதால், தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அருகருகே புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பயன்படுத்த முடியாத அந்தப் பழைய ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையிலேயே உள்ளன. வம்பன் பயறு ஆராய்ச்சி மையத்திற்கு எதிரிலேயே ஒரே இடத்தில் 8 அங்குல குழாயுடன் ஒரு ஆழ்குழாய் கிணறும், 6 அங்குல அகல குழாயுடன் 2 ஆழ்குழாய் கிணறுகளும் அதிகமான பொதுமக்கள் செல்லும் பிரதான சாலை ஓரத்திலேயே உள்ளன. அந்தப் பகுதியில் அவசரத்திற்கு ஒதுங்குபவர்கள் ஏராளம் என்பதால் அவர்களுடன் வரும் குழந்தைகள் எட்டிப் பார்த்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. இதேபோல சற்று தூரத்தில் மேலும் 2 ஆழ்குழாய் கிணறுகளும் பாதுகாப்பற்று மூடப்படாமல் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்தக் ஆழ்குழாய் கிணறுகளைப் பாதுகாப்பாக மூடி, மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்க பயன்படுத்தினால் நிலத்தடி நீரும் உயரும், பேராபத்தும் நீங்கும்.