திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மாவட்டக்கவுன்சிலர் பதவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி உட்பட அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பாக ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான ப.க.சிவகுருசாமி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திற்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய ஒன்றிய குழு தலைவர் ப.க.சிவகுருசாமி 50 ஆண்டுகளாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் திமுக சார்பாக போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளாட்சி பதவிகளில் இருந்துள்ளேன். இம்முறை நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் திமுகவிற்கு அமோகமாக வாக்களித்து 24 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளில் திமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இது தவிர ஒன்றியகுழ உறுப்பினருக்கான தேர்தலில் ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் திமுக சார்பாக போட்டியிட்டவர்களை பொதுமக்கள் அமோக வெற்றி பெற செய்துள்ளார்கள்.
இதற்கு காரணம் ஆத்தூர் தொகுதி மக்களின் பாதுகாவலரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளருமான அண்ணன் இ.பெரியசாமி அவர்கள்தான் காரணம் என்றார். தொகுதி மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பயன்படுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காகவும், நலத்திட்டங்களை நிறைவேற்றியதற்காகவும் வாக்காளர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் திமுகவிற்கு அமோக வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்றார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரிகள் பொதுநிதியை அதிகஅளவில் செலவு செய்து வங்கிக்கணக்கில் ஒருபைசாகூட இல்லாமல் வைத்துள்ளார்கள்.
இது தவிர 5கோடிக்கு டென்டர் விட்டு அதுவும் ஒரே நபரே எடுத்துள்ளார். இது முறைகேடான செயலாகும். ஒன்றிய நிதி இல்லாததால் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தேர்தலின் போது நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். முதல் கட்டமாக கிராம ஊராட்சிகளில் குடிதண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைப்பதோடு தெருவிளக்கு வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தி கொடுப்போம் என்றார்.
நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்திற்கு வந்த ஒன்றிய குழு தலைவர் ப.க.சிவகுருசாமிக்கு பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
50 வருட அரசியல் அனுபவத்துடன் 84 வயதிலும் சுறுசுறுப்பாக தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ப.க.சிவகுருசாமியின் இந்த பன்பு திமுக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு இவரின் செயல்பாடு நல்ல பாடமாக அமைந்தது. நன்றி தெரிவிக்க வந்த ப.க.சிவகுருசாமியிடம் ஒருசில பொதுமக்கள் காலில் விழுந்து வாழ்த்து பெற்றது நெகிழ்சி அடைய செய்தது. நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி திமுக மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகவேல், கன்னிவாடி பேரூர்கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருணாச்சலம் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாங்கரை ஊராட்சி திமுக பொருப்பாளர் திருப்பதி, டி.புதுப்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கமணி முருகைய்யா கழக பேச்சாளர்கள் கோட்டைப்பட்டி மணி கன்னிவாடி ஜீவா ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டி மீனா, உமாமகேஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.