சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாவது, 'வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் காவல்நீட்டிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் உள்ளதாக தெரிவித்தாலும் செந்தில் பாலாஜி தரப்பின் வாதத்திற்கு பின் அவரது ஜாமீனை ஏற்றார். அதனால் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலையாவது உறுதியாகியுள்ளது. 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில் பாலாஜி வெளியே வர இருப்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையின் முன் அதிகப்படியான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.