தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சோதனைகள் செய்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் அதிகமாக ஆடுகள் திருடப்படுவது சம்பந்தமாக தனிப்படைகள் அமைத்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில் ஆடு திருட்டு சம்பந்தமாக விசாரிக்கச் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சர் லாரியை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்த போது, லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி முருகன் மகன் படையப்பா (24) முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லியுள்ளார். இதனால் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது லாரியின் அடியில் ரகசிய அறை அமைத்து அதற்குள் கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து படையப்பா கொடுத்த தகவலின்படி பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த முத்துத்துரை மகன் சிதம்பரத்தையும் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டு வாசலில் புதைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குழாய்களுக்குள் கஞ்சா பண்டல் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்து, அந்த பண்டல்களும் மீட்கப்பட்டதுடன் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் வைத்து மற்றொரு சரக்கு வாகனத்தில் கஞ்சா பண்டல்களை மாற்ற தயாராக நின்ற மதுரை மாவட்டம் ஜெ.ஆலங்குடி பெரிய கருப்பன் மகன் ரமேஷ்குமார் (29). ஆகிய மூன்று பேரையும் கைது செய்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து தஞ்சை எஸ்.பி. ரவளிப்பிரியா கந்தபுனேனி, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பிரித்விராஜ் சௌகான், பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த குமார் மூலமாக ஆந்திராவிலிருந்து இது போல லாரிகளில் ரகசிய அறை அமைத்து கஞ்சா மூட்டைகள் கடத்தி வரப்பட்டு சிதம்பரம் போன்ற மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதுடன் சிதம்பரத்தின் பின்னவாசல் கிராமத்திலிருந்து எந்த சோதனைச்சாவடியும் இல்லாமல் முழுமையாக கிராமங்களுக்குள்ளேயே 15 கி.மீ தூரத்திற்குள் கிழக்கு கடற்கரை கிராமங்களுக்கு கொண்டு சென்று இலங்கைக்கு கடத்துவதற்கு வசதியாக பின்னவாசல் கிராமத்தை தேர்தெடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.