இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் வேகன்கள் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 75,000 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றன. ஆனால் ஆந்திராவில் 53,000 பேர், தெலங்கானாவில் 42,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலைதான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கி வருகிறது. சென்னையில் ஏற்கனவே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "அவசர தேவைகளின் போது அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான் என்றும், மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன" என்று கூறினார்.