திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.
நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்