கரூரில் திமுகவினர் வருமான வரித்துறையினரை தாக்கியதாகக் கூறி 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே எந்தவித போலீஸ் பாதுகாப்பின்றி பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய தனியாகச் சென்றதால் தள்ளுமுள்ளு மற்றும் திமுக தொண்டர்களுடன் வாக்குவாதம் நடைபெற்றது. இன்னும் சில இடங்களில் அதிகாரிகள் அங்கு கூடி இருந்த தொண்டர்களால் விரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்.பியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சோதனைக்கு சென்றனர். இந்த நிலையில் திமுகவினர் தாக்கியதாகக் கூறி வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களை தொடர்புகொண்டபோது, தற்போது இது குறித்து எந்த தகவலும் கூறமுடியாது என்று அழைப்பை துண்டித்தனர்.