வாகனத்தில் லேசாக மோதிய ஒருவரைக் கொலை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திலவேந்திரன் மகன் சின்னப்பன் (35). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தனது பைக்கில் தனது பையில் மாடுகளுக்கு தீவனமாக கரும்பு சோலையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் வாகனம் மீது இவரது வாகனம் லேசாக மோதி உள்ளது. ஆனால் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றபோதும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது பிறகு அது மோதலாக மாறியுள்ளது. அப்போது அங்கிருந்த ஊர் பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இருப்பினும் சின்னப்பன் மீது ஆத்திரம் தீராத கோவிந்தன் தனது சகோதரர்கள் குமார் வேடப்பன், தணிகை நாதன் ஆகியோருடன் சின்னப்பன் வீட்டிற்குச் சென்று சின்னபனிடம் தகராறு செய்ததோடு அவரை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் தாக்குதலினால் சின்னப்பன் உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக சின்னப்பன் மனைவி செல்வமேரி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கோவிந்தன் உட்பட அவரது சகோதரர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செங்கமல செல்வன் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்தத் தீர்ப்பில் சின்னபனை கொலை செய்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் வேலவன் ஆஜரானார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அந்த 4 பேரும் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண கரும்பு சோலை மேலே இடித்தன் காரணமாக ஏற்பட்ட சின்ன பிரச்சனை கொலை வரை சென்றதோடு நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது. ஆத்திரம் அழிவைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் என்று கூறுகிறார்கள் சோழ பாண்டிபுரம் கிராம மக்கள்.