Skip to main content

செங்கோட்டை அருகே 6 கள்ளத் துப்பாக்கிகள் 18 தோட்டாக்கள் பறிமுதல் 4 பேர் கைது

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
செங்கோட்டை அருகே 6 கள்ளத் துப்பாக்கிகள் 18 தோட்டாக்கள் பறிமுதல்
4 பேர் கைது



நெல்லை மேற்கு மாவட்டத்தின் கேரள மாநிலம் செல்வதற்கான நுழைவு வாயில் செங்கோட்டை வட்டத்தை ஒட்டிய புளியரையில் அமைந்துள்ளது. அதன் அருகருகே இரு மாநில அரசுகளின் சுங்கம்,காவல்,வணிகவரி சோதனைச் சாவடிகள் உள்ளன. இத்தனை சோதனைகளிலிருந்தும் தடைசெய்யப்பட்ட பொருள்கள் உட்பட போதைப் பொருள்களும் பிடிபடுவதுண்டு இந்த நிலையில் நெல்லை எஸ்.பி யான அருண்சக்திகுமாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைக்கிறது. அதனடிப்படையில், அச்சன்புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அச்சன்புதுார் - காசிதர்மம் சாலையில் வாகன சோதனையிலிருந்தனர். 

அந்தசமயம் அந்த ரூட்டில் வந்த TN.67.Z.6828 என்ற பதிவு எண் கொண்ட ஆம்னி வேனை வழிமறித்துச் சோதனையிட்டிருக்கின்றனர். காரிலிருந்த மாயமான் குறிச்சியைச் சேர்ந்த ஆழ்வார், காசிதர்மத்தைச் சேர்ந்த காளிமுத்து, மேலகரத்தைச் சேர்ந்த குமாரசாமி, வடகரை பீர்முகம்மது ஆகியோர் துப்பாக்கியைக் காட்டி போலீசாரை மிரட்டியுள்ளனர். அதற்குள் அலர்ட்டான போலீசார் அவர்களை மடக்கி சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கியோடு 6 கள்ளத் துப்பாக்கிகள் 18 தோட்டாக்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை விசாரித்ததில் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆலங்குளத்தையடுத்த மாயமான் குறிச்சியைச் சேர்ந்த ஆழ்வாரின் தந்தை புளியரையிலிருக்கும் போது கள்ளத்தனமாக துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். அதோடு தென்காசியின் செய்யது முகம்மது அப்துல் காதர் செரிப் என்பவரோடு சேர்ந்து காடுகளில் மான், மிளா, முயல், வேட்டையாடியுமிருக்கிறார். செரிப்புடன் வடகரை பீர்முகம்மது, காளிமுத்து, குமாரசாமி ஆகியோர் செரிப்புக்குச் சொந்தமான ஆம்னி வேனில் மலைப்பகுதிகளுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடி அதன் தோல்களை உரித்து தனியாக மறைத்து வைத்துவிட்டு கிடைக்கும் கறியினைப் பங்கு போட்டுள்ளனர்.

இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆம்னி வேனில் செரிப்புக்கு சொந்தமான துப்பாக்கியோடு காசிதர்மம் ஊருக்கு மேற்கேயுள்ள வனப்பகுதியில் மான் வேட்டைக்குச் சென்றுள்ளனர். விலங்குகள் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள தோப்பில் தங்கிவிட்டுக் காலையில் திரும்பும் சமயம் சோதனையிலிருந்து போலீசாரிடம் மாட்டியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்களோடு சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது, என்கிற அடுத்த கட்ட விசாரணைக்கு நகர்ந்துள்ளனர் போலீசார். கள்ளத் துப்பாக்கிகள் தயார் செய்து புழக்கத்தில் விடுபவர்கள் பிடிபட்ட சம்பவம், பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது.
 
பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்