சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்றனர்.
இதில் இயற்கை விவசாயத்துக்கு தேவையான 3ஜி கரைசல், புகையிலை கரைசல், கற்பூரக் கரைசல், எலுமிச்சை மற்றும் முட்டை கரைசல், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், இயற்கை களைக்கொல்லி, சிவப்பு எறும்பு கட்டுப்படுத்துதல், பஞ்சகவ்வியம், வேப்பிலை கரைசல், வாழையில் ஊட்டச்சத்து கரைசல், பூச்சி விரட்டி கரைசல் உள்ளிட்ட 12 வகையான கரைசல்கள் பற்றிய செய்முறைகளை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். அதேபோல் விவசாயிகள் செய்யும் விவசாய முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் கரைசல்களைப் பற்றி அறிந்து கொண்டனர். மேலும், இது போன்ற கரைசல்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்று விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. உழவர் ஆய்வாளர் குழுவின் தலைவர் அழகரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.