ரயில்வே துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் ஆதிமணி. ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 26 பேரிடம் இருந்து மொத்தம் 37 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார்.
ஆனால் உறுதியளித்தபடி அவர் யாருக்கும் ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது, அடிக்கடி சாக்குபோக்கு சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் ஆதிமணி மீது காவல்துறையில் புகார் அளித்தனர். ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி செய்ததால், இந்த வழக்கை சிபிஐ நேரடியாக விசாரித்தது.
இந்த வழக்கின் விசாரணை, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.