உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. கரோனாவால் ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பலர் தங்களது உறவினர்களை, சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கரோனா பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தை அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர்.
அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குத் தனித்துவமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 338 குழந்தைகள் கரோனாவால் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். இதில் 327 குழந்தைகள் தங்களது பெற்றோரில் தாய் அல்லது தந்தையை கரோனா காரணமாக இழந்துள்ளனர். 11 குழந்தைகள் ஏற்கனவே தனது பெற்றோர்களில் தாய் அல்லது தந்தையை விபத்து, தற்கொலை, உடல்நலக்குறைவு என பல்வேறு காரணங்களால் இழந்திருந்தனர். தற்போது இவர்களின் பெற்றோரில் ஒருவர் (தாய் அல்லது தந்தை) கரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் இந்த 11 குழந்தைகள் தாய், தந்தையை என இருவரையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 338 குழந்தைகள் கரோனா தாக்கம் காரணமாக தங்களது பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 11 குழந்தைகள் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் தங்களது பெற்றோரில் ஒருவரை இழந்து உள்ளனர். தற்போது இவர்களின் பெற்றோர்களில் ஒருவர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் 11 குழந்தைகள் தற்போது தாய், தந்தை இல்லாமல் உறவினர்கள் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 11 குழந்தைகளில் முதற்கட்டமாக 4 குழந்தைகளுக்கு அரசின் சார்பில் ஏற்கனவே தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 20 லட்சம் அவர்களது பெயரில் வைப்பு நிதித் தொகையாக வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 18 வயது பூர்த்தி ஆனதும் முதிர்வுத் தொகை வட்டியுடன் கிடைக்கும்.
மேலும் இவர்களுக்கு மாதம் மாதம் அரசு சார்பில் ரூபாய். 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 11 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்கு ஏற்கனவே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கரோனாவால் தங்களது பெற்றோர்களில் ஒருவரை இழந்த 327 குழந்தைகளில் 14 குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா 3 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள குழந்தைகளுக்கு படிப்படியாக அரசின் சார்பில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது." என்றார்.