சேலம் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 32வது குற்றவாளியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை, ரவுடி. இவர் மீது பல கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றது.
இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் பழனிசாமி உள்பட 31 பேரை கிச்சிப்பாளையம் காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். இவர்களில் 12 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 31 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, இந்தக் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட நாகர்கோயிலைச் சேர்ந்த சுதர்சன் (எ) சேட்டான் (வயது 35) என்பவரைக் கிட்டத்தட்ட ஓராண்டாகத் தேடிவந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் மட்டும் காவல்துறை கண்களில் படாமல் போக்குக் காட்டிவந்தார்.
இந்நிலையில்தான், திருவண்ணாமலையில் நடந்த ஒரு கொலை வழக்கில் கூலிப்படை ரவுடி சுதர்சனை அம்மாவட்ட காவல்துறையினர் அண்மையில் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் சுதர்சன் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தெரியவந்தது.
இதையடுத்து, கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் புதன்கிழமை (06.10.2021) வேலூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அவரை கைது செய்த காவல்துறையினர், சேலம் அழைத்து வந்துள்ளனர். சுதர்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.