தமிழகத்தில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக காவல் துறையும்,தமிழக அரசும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தாமலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமலும் உள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ரோசன் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.செல்வம், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உலகளவில் 4.58 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாகவும், அதில் இந்தியாவில் 1.83 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் 2016ம் ஆண்டு சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டிய மனுதாரர், கொத்தடிமைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்ட போதிலும், 32 வழக்குகளில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசும்,தமிழக காவல்துறையும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.