கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்குட்பட்ட புன்னம் அருகே முருகன் என்பவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, சில்லறை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகன் என்பவரது வீட்டில் சோதனை செய்ததில் 2 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் முனியசாமி என்பவர் வாகனத்தில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கொண்டு சென்றதாக தகவல் கொடுக்க வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தவகையில் ஞானப்பரப்பை - ஆத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆமினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கைப்பற்றியதுடன் வாகனத்தில் வந்த முனியசாமியையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இதனிடையே கரூரில் 302 கிலோ குட்கா பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பாக விசாரணை செய்து குட்கா பொருட்களை கைப்பற்றிய காவலர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக தெரிய வந்தால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.