சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், ஆத்தூரைச் சேர்ந்த சின்னதுரை (35) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர், சேலம் மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (30) என்பவர், எங்கள் நிறுவனத்தில் காசளராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய காலத்தில் 30 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தினர். அதில், அந்த நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் உள்ள காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை 30.23 லட்சம் ரூபாயை காசாளர் நாகராஜ் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று (பிப். 13), காசாளர் நாகராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரும் பணத்தை கையாடல் செய்ததாக ஒப்புக்கொண்டார். நாகராஜை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.