Skip to main content

ஊறல் சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள் பாதிப்பு! காவல்துறை தீவிர விசாரணை!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

3 school students affected by soaking alcohol! Police serious investigation

 

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர், திருட்டுத்தனமாக போலியான மதுபானங்களைத் தயாரித்துவருகின்றனர். 

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அங்குள்ள வயல்வெளியில் நேற்று (03.06.2021) மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவ்வாறு வரும்போது 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் அன்பரசன் (15), கபிலன் (16), தமிழ்மாறன் (17) ஆகிய 3 பள்ளி மாணவர்களும் அங்குள்ள வயல்வெளியில் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

 

இதையடுத்து மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு விசாரித்தபோது, அவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒருவரது வயலில் ஊறல் போடப்பட்டிருந்த சாராயத்தை குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் சிகிச்சைக்காக குள்ளஞ்சாவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அங்கு மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 17 வயது மாணவன் தமிழ்மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. 

 

3 school students affected by soaking alcohol! Police serious investigation

 

அதையடுத்து அவர் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்ற இரண்டு பேரிடமும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இதனிடையே சட்டவிரோதமாகவும் ஊரடங்கினை மீறியும், சாராயம் காய்ச்சிய சாராய வியாபாரி பூபாலனை கைது செய்த குள்ளஞ்சாவடி போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பள்ளி மாணவர்கள் ஊறல் சாராயம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்