
திண்டுக்கல் அருகே சட்டக் கல்லூரி மாணவர் தங்கப்பாண்டி மற்றும் இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தங்கப்பாண்டி, மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வழக்கப்படி அருகே தடுப்பணையில் உறவினர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக தங்கப்பாண்டி, நீரில் மூழ்கியுள்ளார். அதைக் கண்டு பதறிப்போன உறவினர்கள், காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை. அதனால் தங்கப்பாண்டி நீரில் மூழ்கி பலியானார்.
அதேபோல் திண்டுக்கல் ரெட்டியபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ஹரிஷ். இவர் ரெட்டியபட்டி அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரும், ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த வில்லியம் ரிச்சர்ட் ஆகிய இரு சிறுவர்களும் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, தண்ணீருக்குள் தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். இப்படி ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.