மனைவி இறந்த சோகத்தில் அப்பா, மகன், மகள் என மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை திருவொற்றியூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் வசித்து வரும் அருள் என்பவருடைய மனைவி அம்சா. முடக்குவாதத்தால் அம்சா பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியை இழந்த சோகத்தில் கணவன் அருள் மற்றும் குழந்தைகள் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் துக்கம் தாள முடியாமல் மூன்று பேரும் வீட்டிலேயே அம்சாவின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்து திருவொற்றியூர் போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவி இறந்த சோகத்தில் கணவனும் இரண்டு குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.