Skip to main content

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி



புதுக்கோட்டை, செப்,25-ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் புதியதாக பணி நியமனம் பெற்ற 128 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 நாள் புத்தாக்கப்பயிற்சி தொடக்கவிழா நேற்று 25-09-2017(திங்கட்கிழமை) நடைபெற்றது. பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியை ஏ.பெட்லாராணி வரவேற்றுபேசினார். பயிற்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச.செந்திவேல்முருகன் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிற நீங்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்.  

உடல் வலிமையுடன் மனவலிமையினை பெறும் வகையில் நீங்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். வகுப்பறைகளில் பல்வேறு திறன்களை உடைய மாணவர்களும் இருப்பார்கள். நீங்கள் அந்த மாணவர்களின் திறன் அறிந்து அனைத்து மாணவர்களையும் முழுதேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் கடுமையாக உழைக்கவேண்டும். இந்த ஆண்டு பிளஸ்ஒன் மற்றும் பிளஸ்டூ வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு இருப்பதால் இந்த 3 நாள் புத்தாக்கப்பயிற்சியின் வாயிலாக சிறப்பான வழிகாட்டலைப்பெற்று அவரவர் கற்பிக்கும் பாடங்களில் மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெறுவதோடு அதிக மதிப்பெண்ணுடன் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய  பன்முகத்திறன் படைத்தவர்களாக மாற்ற பாடுபடவேண்டும். 

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நீங்கள் கற்பிக்கும் பாடங்களில் அன்றாட தகவல்களுடன் தேடலை மேற்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கற்பித்தலை செய்து இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதன்மையான இடத்தினை பெற பாடுபடுமாறு  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனவேலு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலைக்கல்வி சு.சின்னப்பன், இடைநிலைக்கல்வி ஆர்.கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து வாழ்த்தி பேசினார்கள். 3 நாள் நடைபெறும் இந்த புத்தாக்கப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு. புவியியல் ஆகிய 12 பாடங்களுக்கும் பாடவாரியாக தலா 2 கருத்தாளர்கள் வீதம் 24 கருத்தாளர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை வழங்கிவருகிறார்கள். புத்தாக்கப்பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் நிறைவாக பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியின் மமுதல்வர் கே.அண்ணாமலைரஞ்சன் நன்றி கூறினார். நேற்று 25ந்தேதி(திங்கட்கிழமை) தொடங்கிய புத்தாக்கப்பயிற்சியானது இன்றும்26(செவ்வாய்கிழமை) நாளையும் 27(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்