பயிர்க்கடன் வழங்கியதில் 3.63 கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட இரண்டு சங்கங்களின் நிர்வாகக் குழுக்களை அதிரடியாக கலைத்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின.
அதன்பேரில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், 113 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மூலம் 3.63 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டதாக சங்கத்தின் தஸ்தாவேஜூகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
தீவிர விசாரணையில் அப்படி யாருக்கும் கடன் வழங்காமலேயே கடன் வழங்கியதாக போலியான விவரங்களை பதிவு செய்து, சங்கத்திற்கு 3.63 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து விளக்கம் அளிக்க, சங்கத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும், சங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதோடு, நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் மண்டல கூட்டுறவுத்துறை கூறியது.
மேலும், வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுவை, கூட்டுறவு சங்க விதிகள் பிரிவு 88 (1)ன் கீழ் கலைத்து, சேலம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நிர்வாகப் பணிகளை கவனிக்க, தனி அலுவலரும் நியமிக்கப்பட்டார்.
அதேபோல், கருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கோரும் அளவுக்கு பயிர்க்கடன் வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், சங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளை சரியாக செயல்படுத்துவதில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
விசாரணையில் இந்த புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக் குழுவையும் கலைத்து மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.